மீட்கப்பட்டவர்களில் 7 குழந்தைகள் மற்றும் 24 பெண்கள் அடங்குவர்.
Chennai: தஞ்சை மாவட்டத்தில் 12 ஆண்டுகள் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் 7 சிறுவர்களும் 24 பெண்களும் அடங்குவார்கள். வாங்கிய கடனை செலுத்த முடியாத இவர்களை கொத்தடிமைகளாக செங்கல் சூளை உரிமையாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கொத்தடிமைகள் தினந்தோறும் 1000 செங்கல்களை வெட்டி அடுக்க வேண்டும். இவர்களுக்கு வாரம் ரூ. 1000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. மற்ற தொகை அவர்கள் வாங்கிய கடனுக்கும் வட்டிக்குமாக செங்கல் சூளை உரிமையாளர்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்த செயலில் ஈடுபட்ட சூளை உரிமையாளர்கள் கே.ராஜு, சேகர், எம். மணி என கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி வீராசாமி என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், ‘நாங்கள் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் யாரும் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. சிலர் இங்கு 12 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளனர். அவர்கள் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 4 லட்சம் வரை கடனாகப் பெற்றுள்ளனர். கடனை திருப்பி அளிக்க முடியாததால் அவர்கள் இங்கு கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளனர்' என்றார்.
மீட்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு இடங்களில் சுமார் 200 கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர்.