சுங்கச் சாவடி கட்டண உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 15 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதனை அரசின் பகல் கொள்ளை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் கடக்கும் நல்லூர், பாளையம், வைகுந்தம், எலியார்பத்தி, கொடை ரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, நத்தக்கரை, புதூர்பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளுக்கும் ஏற்ப கட்டணம் மாறுபடும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி, 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கார், ஜீப் பயணிகள் வேன்களுக்கு ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 80 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பலமுறை பயண கட்டணம் 125 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 145 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான பலமுறை பயண சுங்கக்கட்டணம் 215 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் உள்ள வைகுண்டம் சுங்கச்சாவடியில் லாரி மற்றும் டிரக், பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல பழைய கட்டணம் 170 ரூபாயாக இருந்தது. அது 10 ரூபாய் கட்டணம் உயர்ந்து 180 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. லாரி மற்றும் டிரக், பேருந்துகளுக்கு ஒரு நாளைக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வர ரூ.255 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 ரூபாய் உயர்ந்து ரூ.265 வசூலிக்கப்படுகிறது.
இதுபோல பல வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூபாய் 265 பழைய கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் தற்போது 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 285 அதிகரித்துள்ளது. பல அச்சு வாகனங்கள் ஒரு நாளைக்கு பலமுறை வந்து செல்ல செலுத்த வேண்டிய கட்டணம் 410 ரூபாயில் இருந்து, 430 உயர்ந்துள்ளது. கார் மற்றும் ஜீப், வேன்களுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது!
அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை!
சுங்கச் சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது!
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.