வாகனங்களில் இருந்து வெளிப்படும் தொகை, கட்டிடங்கள் கட்டப்படுவதால் வெளியேறும் தூசு போன்ற பல காரணங்கள் காற்று மாசுபாட்டிற்கு உண்டு.
தமிழகத்தில் காற்று மாசுபாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்திருக்கிறது. சுவாசிப்பதற்கே மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், இதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் புகைதான் முக்கிய காரணம் என்று டெல்லி அரசு குற்றம் சாட்டியுள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சென்னையிலும் அதிகாலை நேரத்திலும், மாலைப் பொழுதிலும் மேக மூட்டங்கள் அடர்ந்து காணப்பட்டன.
இதனால் சென்னையையும் காற்று மாசு சூழ்ந்து விட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் காற்று மாசை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
கடந்த ஒருவார காலமாக சென்னையில் அதிகாலை நேரத்தில், மேக மூட்டங்கள் காணப்பட்டன. அவை பனியா அல்லது காற்று மாசுபட்டிருக்கிறதா என்ற சந்தேகம் பொதுவாக ஏற்பட்டது. புல்புல் புயல் காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை உண்டாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படுகிற போது Cloud Cover தாழ்வான நிலைக்கு வரக்கூடிய சூழல் இருக்கும். அவ்வாறு வரும்போது சூரிய ஒளி முழுமையாக வருவதற்கு வாய்ப்பு இருக்காது. கடல் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும்.
வாகனங்களில் இருந்து வெளிப்படும் தொகை, கட்டிடங்கள் கட்டப்படுவதால் வெளியேறும் தூசு போன்ற பல காரணங்கள் காற்று மாசுபாட்டிற்கு உண்டு.
தமிழ்நாட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் 28 காற்று தர ஆய்வு நிலையங்கள் உள்ளன. காற்று மாசை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சில மையங்களில் 201 முதல் 300 வரை காற்று மாசு அளவு பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.