Read in English
This Article is From Nov 22, 2019

கமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார்? - ரஜினிகாந்த் பதில்!

தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து பணியாற்றத் தயார் என்று நடிகர் கமலும், ரஜினிகாந்தும் அறிவித்துள்ளனர். இருவரது அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
தமிழ்நாடு Written by

கோவாவில் நேற்று ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கமலுடன் இணைந்து பணியாற்றினால் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிசயம் நடக்கும் என்றும் ரஜினி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கோவாவில் நேற்று வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதுபற்றி தனது கருத்தை தெரிவித்தார். ‘'நேற்று நான் வாங்கிய விருதுக்கு தமிழக மக்கள்தான் காரணம். எனவே அந்த விருதை தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்'' என்று விருதுபற்றி ரஜினி கூறினார்.

தொடர்ந்து, ‘கமலும் நீங்களும் இணைந்து பணியாற்றுவதாக கூறினீர்கள். அப்படியென்றால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுகிறதே?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

‘தேர்தல் நேரத்தில், அப்போதைய சூழலில் எடுக்கப்பட வேண்டிய முடிவு இது. நான் கட்சி ஆரம்பிக்கும்போது, நானும் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு இது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அப்போது சொல்கிறேன். இப்போது அதுபற்றி பேச விரும்பவில்லை.' என்று பதில் அளித்தார்.

Advertisement

தமிழக திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி, ‘2021 தேர்தலில் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள்' என்று கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவரது கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 

Advertisement

நடிகர் ரஜினிகாந்த், தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாக 2017-ல் தனது விருப்பத்தை அறிவித்தார். இதுவரை அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. இருப்பினும், 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவது உறுதி என்று கூறியுள்ளார். இதனால் அவர் அடுத்த ஆண்டு கட்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ரஜினி, கமல் என இருவரையும் ஆளும் அதிமுக பொருட்படுத்தவில்லை. 2021-ல் அதிசயம் நடக்கும் என்று ரஜினி சொன்னது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டபோது, ரஜினி முதலில் கட்சியை ஆரம்பிக்கட்டும் என்று கிண்டலாக பதில் அளித்தார். 

Advertisement