Tamilnadu Rain Update- அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்
Tamilnadu Rain Update- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையில் (Monsoon Rain) சற்று இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்குமா என்பது பற்றி தகவல் தெரிவித்துள்ளது வானிலை மையம் (IMD).
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டலம் தெரிவிக்கையில், ‘அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் குறித்து தெரிவிக்கையில், ‘மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு திசை நோக்கி நகர்ந்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு புயலாகவும் மாறும். புயலாக மாறிய பின்னர் மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா மற்றும் வங்கதேச கடற்கரையையொட்டி அது நகரும்,' எனக் கூறப்பட்டுள்ளது.