வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. வெள்ளம் காரணமாக பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
முன்னெச்சரிக்கையாக தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறார்கள். மழை நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மழை தொடர்வதால் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவு 120-யை தாண்டத் தொடங்கியுள்ளது. அணைக்கு நீர் வரத்து நொடிக்கு 16 ஆயிரத்து 990 கன அடியாக உள்ளது.
இதற்கிடையே கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.02 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.