This Article is From Nov 17, 2018

ஓய்ந்த ‘கஜா’ புயல்: இன்று எங்கெல்லாம் கனமழை..?

புயல் தமிழகத்தைக் கடந்து விடும் என்ற போதும் இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

ஓய்ந்த ‘கஜா’ புயல்: இன்று எங்கெல்லாம் கனமழை..?

வங்கக் கடலில் உருவான ‘கஜா' புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வங்கக்கடலில் நிலைகொண்ட கஜா புயல் நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது. கஜா புயல் கரையைக் கடக்கும் போது ஏற்பட்ட கடுமையான காற்றினால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

110 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பல பகுதிகளில் மின் கம்பங்களும், மரங்களும் சாய்ந்துள்ளன. கஜா புயல் காரணமாக 3 மாவட்டங்களில் சுமார் 12,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

நேற்று திண்டுக்கல் அருகில் கஜா புயல் நிலைகொண்ட போது, அது காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கஜா புயல் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புயல் தமிழகத்தைக் கடந்து விடும் என்ற போதும் இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம், ‘திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளது.

.