This Article is From Aug 20, 2019

‘’பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்’’ : கி.வீரமணி

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

‘’பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்’’ : கி.வீரமணி

பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

பால் விலையை உயர்த்தியதற்கு பதிலாக மது விலையை உயர்த்தலாம் என்று தமிழக அரசை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

ஆவின் பால் (Aavin milk) விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பால் பொருட்களான டீ, காபி, நெய், உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக உயரக்கூடும் என்ற அச்சம் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில் பால் விலை உயர்வு விவகாரம் தொடர்பாக திராவிடர் கழக தலைவர் வீரமணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

”ஆவின் பால் விலையை திடீரென்று லிட்டருக்கு 6 ரூபாய் விலை உயர்த்துவதாக ஆவின் பால் நிர்வாகம் அறிவித்துள்ளது - சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினரை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

பால் ஊட்டச் சத்துணவு; ஏழை, எளிய தொழிலாளர்கள், வீட்டவர்களுக்கு காபி, டீ அருந்துதல் தவிர்க்க முடியாத அன்றாடப் பழக்கமாகிவிட்ட நிலையில், பால், முட்டை போன்றவைகளின் விலைகளை தமிழக அரசு உயர்த்தி, மக்களின் - குடும்பத் தலைவிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல், தவிர்க்கவேண்டும் - மறுபரிசீலனை செய்யவேண்டும் !

மாட்டுத் தீவனங்கள் விலை உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலையைத் தரவேண்டாமா? என்ற கேள்வி எழலாம். அது மக்கள் நல அரசில் பல இலவசத் திட்டங்கள் தருவதைக் கூட குறைத்து, இவர்களுக்கு விலைக் குறைத்து, உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையைக் கூட்டி, மானியம் (Subsidy) போன்ற உதவித் தொகை தருவதுபோல தரலாமே!

பால் விலையை ஏற்றாமல், டாஸ்மாக்கில் குடிகாரர்களுக்கு விற்கப்படும் போதை மது வகைகளுக்கு விலை ஏற்றலாம்; அத்தொகை கூடுதல் வருமானம். அதிக விலை என்பதால், டாஸ்மாக் குடிகாரர்களின் கொள்முதல் குறைந்து, குடிப்பவர்கள் அளவும் குறைந்தால், அவர்களுக்கும் சரி, அரசுக்கும் சரி ஆரோக்கியமானது அல்லவா! ‘குடி குடியைக் கெடுக்கும்‘ என்று போர்டு எழுதி வைப்பது ஒரு சடங்காச்சார சங்கதி.

எனவே, மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைத்து - உற்பத்தியாளர் நலன் - உரிமை - நுகர்வோர் நலன் - உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டியது அவசியம்''

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

.