தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஃபேஸ்புக்கில் மழை நிலவரத்தை அப்டேட் செய்துள்ளார்.
ஃபனி புயலால் தமிழகத்திற்கு மழை வருமா என்பது குறித்த முக்கிய தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் அப்டேட் செய்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நீர் ஆதாரங்கள் வற்றி வரும் நிலையில் மழை இல்லாததால் தமிழகத்தின் பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
இதனால் தமிழக மக்கள் மழை எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 3-ம்தேதி இந்தப் புயல் ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபனி புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காது என கூறப்படும் நிலையில், மழைக்கான சாத்தியக் கூறுகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
மிகப்பெரும் புயலான ஃபனி, ரேடார் கருவியின் எல்லைக்குள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அதன் இருப்பிடத்ததை பொருத்தளவில் அட்ச ரேகை 84.5 E- ல் உள்ளதுடன், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அட்ச ரேகை 82.5 E-க்குள் வந்தால் நமக்கு நல்ல மழை கிடைக்கும்.
வட தமிழக்ததின் உட்பகுதியில் இன்றிரவும், அதிர்ஷ்டம் இருந்தால் வட கடலோர பகுதியில் நாளையும் மழை பெய்யும். இந்த வார இறுதியில் இருந்து வெயில் கொளுத்த தொடங்கி விடும்.
மழை வந்தால் இன்றிரவு வரும். அல்லது நாளை வரலாம். இதை விட்டால் சென்னைக்கு ஃபனி புயலால் மழை கிடைக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு பிரதீப் ஜான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.