கோடை வெயில் கொளுத்தி வருவதால் தமிழக மக்கள் மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வரும் 27-ம் தேதி புயல் வரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை வெயில் வதைத்து வருவதால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு நீர்நிலை ஆதாரங்கள் வற்றத் தொடங்கியுள்ளன.
இதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் வரும் 27-ம்தேதி தமிழகத்தில் புயல் வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது-
தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை 25-ம்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது நாளை மறுதினம் 26-ம்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
இதன்பின்னர் ஏப்ரல் 27,28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று தமிழகத்தின் கடற்கரையோர பகுதியில் நகரக்கூடும். இதனால் மீனவர்கள் 26-ம்தேதி முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக கோடை மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.