வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், அது தமிழகத்துக்கு எப்படிப்பட்டத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ‘தென் மேற்கு வங்கக் கடல் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, சென்னைக்கு 690 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. அது மணிக்கு 11 கி.மீ வேகமத்தில் நகர்ந்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, டிசம்பர் 17 பிற்பகலில் ஆந்திராவின் ஓங்குர் - காக்கிநாடாவுக்கு இடையில் கரையைக் கடக்கும்.
இதனால், 15, 16 தேதிகளில் வட தமிகழத்தில் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை, தரைக் காற்று அதிகமாக வீசும். தரைக் காற்று, சுமார் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும். நகரத்தில், இன்று லேசான மழை இருக்கும். நாளை நல்ல மழை பெய்யும்.
15,16,17 தேதிகளில் மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்' என்று கூறினார்.