தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது.
இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீர் சுமார் 40 சதவீதம் அளவிற்கு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இப்படி, கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் திணறி வருகின்றன. மேலும் தங்கும் விடுதிகளும் முடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கு இந்த பருவமழை முக்கிய தீர்வாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபும், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.