This Article is From Jun 11, 2019

‘வாயு’ புயல்; தமிழகத்துக்கு மழை உண்டா…- என்ன சொல்கிறார் ‘தமிழ்நாடு வெதர்மேன்’?

“அரபிக் கடலில் புயல் உருவானால், அது கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு மழையைக் கொடுக்கும்"

‘வாயு’ புயல்; தமிழகத்துக்கு மழை உண்டா…- என்ன சொல்கிறார் ‘தமிழ்நாடு வெதர்மேன்’?

தென்மேற்குப் பருவ மழை வலுப்பெற்று வரும் நிலையில், அரபிக் கடலில், ‘வாயு' என்கிற புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை இருக்குமா என்பது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர், “அரபிக் கடலில் புயல் உருவானால், அது கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு மழையைக் கொடுக்கும். அதேபோல மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்திலும் இந்தப் புயலினால் மழை பெய்யக்கூடும்.

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளான குடகுப் பகுதியில் இதனால் நல்ல மழை வரும். வயநாட்டிலும் மழை அதிகமாக இருக்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரியைச் சேர்ந்த கோடையார், கோவையின் வால்பாறைப் பகுதி, நீலகிரி பகுதிகளில் இந்த புயல் மழையைக் கொண்டு வரும். பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தப் புயலினால் பலத்த காற்று வீசக்கூடும்.

சென்னைக்குப் பெரிதாக இதனால் மழை இருக்காது.” என்று விளக்கமாக கூறியுள்ளார். 

.