Tamilnadu Weatherman Update - "வரும் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் முதல் வாரம் முடியும் வரை, சென்னையில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது."
Tamilnadu Weatherman Update - தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் தினமும் மழை (Rain) பெய்து வரும் நிலையில், சென்னையில் (Chennai) ஒரு சில நாட்களே நல்ல மழை பெய்தது. இதன் உச்சமாக, நவம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 2 வார காலம் சென்னையில் மழையே இல்லாத நிலை உருவானது. வழக்கமாக, வடகிழக்குப் பருவமழையின் போது, 4 அல்லது 5 நாள் இடைவெளியில் மழை பெய்துவிடும் நிலையில், சென்னையில் ஏற்பட்ட மிகப் பெரிய பிரேக், வெயில் காலத்தில் நீர் தட்டுப்பாடாக எதிரொலிக்குமா என்ற சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளன.
இது குறித்து விளக்கியுள்ள, பிரபல வானிலை கணிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman), பிரதீப் ஜான், “இந்த ஆண்டு தமிழக அளவில் மழை, எதிர்பார்த்த மாதிரியே நல்ல அளவில் பெய்து வருகிறது. சுலபமாக சராசரி மழை அளவைக் கடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதே நேரத்தில் சென்னையில் இதுவரை சராசரி அளவைவிட மிகக் குறைவாகவே மழை பொழிவு இருந்துள்ளது. இரவு நேரங்களில் மிகவும் குளிர ஆரம்பித்துள்ளதால் பலரும், மழைக் காலம் முடிந்துவிட்டதா எனக் கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. வரும் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் முதல் வாரம் முடியும் வரை, சென்னையில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், இந்த தேதிகளில் பரவலாக மழை பெய்யும். அப்படி மழை அதிக அளவில் பெய்யும் போது, தற்போதுள்ள பற்றாக்குறை அதிக அளவு குறைந்துவிடும். ஒன்றிரண்டு நாட்கள் கனமழை பெய்தாலே, சென்னையில் நிலவி வரும் மழைப் பற்றாக்குறை சுலபமாக குறைந்துவிடும்.
அதே நேரத்தில் கனமழை பெய்தால், இந்த முறையும் சென்னைக்கு வெள்ளம் வருமா என்கின்ற அச்சமெல்லாம் தேவையில்லை. அப்படி ஒரு நிலைமை இப்போது இல்லை. காரணம், சென்னையில் உள்ள நீர் நிலைகளின் அளவு மிகக் குறைவாகவே இருக்கின்றன. அவை நிரம்ப நாள் எடுக்கும். அதன் பிறகுதான் எது பற்றியும் சொல்ல முடியும். தேவையில்லாமல் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். மழை நாட்கள் வரவுள்ளன. ஆர்வத்துடன் காத்திருப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.