Cyclone Fani: இந்நிலையில் பிரபல வானிலை வல்லுநரான ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Cyclone Fani : தமிழகத்தில் ‘ஃபனி' என்ற புயலால் இன்னும் சில நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல வானிலை வல்லுநரான ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் ‘ஃபனி' ( Fani ) புயல் குறித்து கூறுகையில், ‘ஏப்ரல் மாதத்தில் தமிழக உள் மாவட்டங்களில் நல்ல மழை பொழிந்தது. இது வெப்ப சலன மழையாகும். இந்த வெப்ப சலன மழை நேற்றிலிருந்து குறைந்து காணப்படுகிறது. வரும் நாட்களில் அது முற்றிலும் குறையும்.
ஆனால், வங்கக் கடலில் காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்த காற்றழுத்த மண்டலமாக மாறும். அது இன்னும் வலுப்பெற்று புயலாக மாறும். அந்தப் புயலுக்குப் பெயர்தான் ‘ஃபனி' எனப்படுகிறது. இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்தப் புயல் தமிழகத்துக்கு வருமா. அல்லது தமிழகத்துக்குப் பக்கத்தில் வந்து ஆந்திரா நோக்கி சென்றுவிடுமா என்பதை இப்போது யூகிக்க முடியாது. ஆனால், அப்படி சென்றாலும் கூட வட தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒரு வேளை, கடலூருக்கு அருகே ஃபனி புயல் (Cyclone Fani) வந்து, வேலூரில் கரையைக் கடந்து பிறகு ஆந்திரா நோக்கி சென்றால் கனமழையிலிருந்து மிக கனமழை பெய்யக்கூடும். சென்னைக்கு அருகில் புயல் வந்தால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மழையைக் கொடுக்கும்.
இந்தப் புயல் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த இன்னும் 5 நாட்கள் இருக்கிறது. ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி மழை ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. புயல் தமிழகத்துக்கு அருகே வரவுள்ளது உறுதி. ஆனால் எவ்வளவு அருகில் வரும், எப்படிப்பட்ட மழையைக் கொடுக்கும் என்பது தெரியாது' என்று கூறியுள்ளார்.