ஜூன் 21-க்கு பிறகு தமிழகத்தில் வெயிலின் கொடுமை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஜூன் 21-ம் தேதி (நாளை மறுதினம்)க்கு பின்னரே தமிழகம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போதிய மழை இல்லாததாலும், வெயில் தாக்கம் அதிகரித்திருப்பதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
சென்னையின் சில இடங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மக்கள் சிலர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். ஓட்டல்களிலும் தண்ணீர் பிரச்னை காரணமாக உணவு தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரளா உள்ளிட்ட இடங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில், ஜூன் 21-ம்தேதிக்கு பின்னர் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்பின்னர் வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலேயே வழக்கமாக பருவமழை தொடங்கி விடும் நிலையில், தற்போது 3 வாரங்கள் கடக்கவுள்ள நிலையில் மழை ஏதும் பெய்யவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை தாமதமாகியுள்ளது.