Tamilnadu Weatherman அப்டேட் - "சென்னையைப் பொருத்தவரையில் பகல் நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்யும். இரவும் காலையிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்."
Tamilnadu Weatherman அப்டேட் - தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (North East Monsoon) தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மாநில அளவில் மழை (Rain) எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' (Tamilnadu Weatherman) பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் வெதர்மேன், “கன்னியாகுமரியில் மிகவும் கனமழை பெய்து வருகிறது. அதேபோல தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், நீலகிரியிலும் நல்ல மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை வட்டத்தில் பரவலான மழை பொழிவு இருக்கிறது. இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழை நாட்களாக தெரிகின்றன. சென்னைக்கும் இது பொருந்தும்.
ராமநாதபுரம், டெல்டா, கடலூர் மற்றும் சென்னைக்கு தற்போது உருவாகியுள்ள மேகக் கூட்டங்கள் நல்ல மழை பொழிவைத் தரும். சென்னையைப் பொருத்தவரையில் பகல் நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்யும். இரவும் காலையிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் குழிந்துரையில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரின் பெரியநாயக்கன்பாளையத்தில் 123 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.