சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழையால், நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில், கடந்த 3 நாட்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்கள் மத்தியில் இன்று பேசுகையில், “தென் மேற்கு பருவமழை கர்நாடக பகுதிகளில் வலுவாக உள்ளது. தமிழகத்தில் நேற்று நிலவிய வளி மண்டல கீழ் அடுக்க சுழற்சி தொடர்ந்து இன்றும் நிலவுகிறது. அடுத்து 24 மணி நேரத்திற்கு வட தமிழக மற்றும் புதுவையிலும் ஒரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின்படி அதிகபட்சமாக திருப்புவணத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக ஆரணி மற்றும் திருத்தணியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த ஜூன் 1 முதல் இன்று வரை 89 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்வு அளவு 117 மில்லி மீட்டர் ஆகும். தற்போது நிலவுவது இயல்பைவிட 24 சதவிகிதம் குறைவாகும். ஆனால், இந்த பற்றாக்குறை வரும் நாட்களில் குறையும்” என்று கூறியுள்ளார்.