தமிழக முன்னாள் முதல்வரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை, சென்னையில் நாளை திறந்து வைக்கப்பட உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சோனியா காந்தி உட்பட பல தேசிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக-வினரை வழக்கம் போல புறக்கணித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழிசை இது குறித்து பேசுகையில், ‘கலைஞர் கருணாநிதி, உடல்நலமின்றி இருந்தபோதே அவரது இல்லத்துக்குச் சென்று நேரில் நலம் விசாரித்தவர் பாரதப் பிரதமர் மோடி. அதேபோல, அவர் மறைவுக்கும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் மோடி. அப்படி, கருணாநிதி வாழ்ந்த போதும், மறைந்த போதும் அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தியது பாஜக.
அப்படியிருக்க, அவரின் முழு உருவச் சிலைத் திறப்பு விழாவுக்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. அது அவரின் விருப்பம்' என்று கூறினார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி, திமுக-வில் இணைந்திருப்பது குறித்து பேசிய தமிழிசை, ‘தினகரன் மீதிருந்த ஈர்ப்பு, திடீரென்று எப்படி ஸ்டாலின் மீது செந்தில் பாலாஜிக்கு வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் எந்தக் கட்சியில் இருந்தாரோ, அதற்கு நேரதிரான கொள்கை கொண்ட கட்சியில் சென்று இணைந்துள்ளார். அது ஒரு சந்தர்ப்பவாதமே தவறு. இதில் நான் கருத்து சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஒன்றும் அல்ல' என்று முடித்துக் கொண்டார்.