நானா படேகர் ராஜஸ்தானில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் தற்போது உள்ளார்.
New Delhi: பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியிருக்கும் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2008-ல் நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று தனுஸ்ரீ புகார் அளித்துள்ளார். இதனால் நடிகர் படேகருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனுஸ்ரீ தனது புகாரில், 2008-ல் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது நடிகர் நானா படேகர் பல முறை பாலியல் துன்புறுத்தல் செய்தார். தன்னுடைய அரசியல் செல்வாக்கு மூலம் என்னை அடி பணிய வைத்தார் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள நானா படேகர், இந்த புகார் குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் விளக்கம் அளித்து விட்டேன். இந்த புகார்கள் பொய்யானது என்று கூறினார். இதற்கிடையே, பொய்யான புகார் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நானா படேகர் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தனுஸ்ரீ புகார் குறித்து படேகர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஊடக மற்றும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு காணப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், படேகரின் மகன் மல்ஹர் பத்திரிகையாளர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். அதில், “ இந்த செய்தியை கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை என்பதை தெரிவிப்பதற்காக இந்த தகவலை அனுப்பியுள்ளேன். இதனை சக பத்திரிகையாளர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.