This Article is From Jul 25, 2018

பிளேபாய் மாடலுடனான உறவை மூடி மறைக்க டிரம்ப் பேரம் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டது

டிரம்ப் தன்னுடன் உறவில் இருந்ததாக பிளேபாய் மாடல் கூறிய செய்தியை விலைக்கு வாங்க தனது வழக்கறிஞருடன் டிரம்ப் ஆலோசனை செய்த ஆடியோவை சிஎன்என் வெளியிட்டுள்ளது

பிளேபாய் மாடலுடனான உறவை மூடி மறைக்க டிரம்ப் பேரம் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டது
Washington:

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடன் உறவில் இருந்ததாக பிளேபாய் மாடல் கூறிய செய்தியை விலைக்கு வாங்க தனது வழக்கறிஞருடன் டிரம்ப் ஆலோசனை செய்த ஆடியோவை சிஎன்என் வெளியிட்டுள்ளது. இது 2016 அதிபர் தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்பு டிரம்பின் முன்னாள் அட்டர்னி மைக்கேன் கோஹனால் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டதாகும். கோஹனின் அலுவலகத்தில் இவ்வாண்டு நடத்திய சோதனையின்போது FBI இதைக் கைப்பற்றியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. அந்த ஆடியோ இப்போது வெளிப்படையாக சிஎன்என்னால் பொதுத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2006இல் டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு மகன் (Barron) பிறந்த சமயத்தில், டிரம்ப் தன்னுடன் உறவுகொண்டிருந்ததாக கேரென் மெக்டாகல் என்னும் முன்னாள் பிளேபாய் மாடல் கூறியிருந்தார். இச்செய்தியை அவர் நேசனல் என்கொயரர் என்னும் பத்திரிகைக்கு 1,50,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்றுவிட்டார். ஆனால் அப்பத்திரிகை அச்செய்தியை வெளியிடவே இல்லை.

தற்போது வெளியாகியுள்ள அந்தத் தெளிவற்ற ஆடியோ பதிவில், கோஹன் ஒரு கம்பெனியை அமைத்து அதன் மூலம் அச்செய்தியை நேசனல் என்கொயரியை நடத்தும் அமெரிக்கன் மீடியா நிறுவனத்திடம் இருந்து வாங்கலாம் என்று கூறும் பகுதி இடம்பெற்றுள்ளது.

அதிபர் தேர்தலுக்கான பரப்புரையின்போது கோஹனுக்கும் அமெரிக்கன் மீடியா நிறுவனத்துக்கும் இடையில் நடந்த பேரங்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று டிரம்ப் தரப்பு கூறி இருந்தது. ஆனால் ஆடியோ பதிவில் கோஹன் அமெரிக்கன் மீடியாவுக்கு அவர்கள் மெக்டாகலுக்கு அளித்த பணத்தைக் குடுத்து ஈடுசெய்வது குறித்துப் பேசுகையில் டிரம்ப் வியப்பேதும் அடையவில்லை. இது அவரது முந்தைய கூற்றுக்கு மாறாக இதுகுறித்து அவர் நன்கு அறிந்திருந்தார் என்பதையே காட்டுகிறது.

மேலும் கோஹன் சில பண பேரம் குறித்துக் கூறும்போது, டிரம்ப், “எந்த ஃபைனான்சிங்?” என்று கேட்பதும் “பணமாகத் தரக்கூடாதா” என்று கேட்பதும் அதற்கு கோஹன் “இல்லை, இல்லை” என்று பதிலளிப்பதும் அதைத் தொடர்ந்த உரையாடல்களும் சிஎன்என் வெளியிட்ட ஆடியோவில் தெளிவற்ற பகுதிகளாக உள்ளன. செப்டம்பர் 2016இல் பதிவு செய்யப்பட்ட இந்த ஆடியோவினை சிஎன்என்னிடம் கோஹனின் அட்டர்னி லானி டேவிஸ் அளித்துள்ளார்.

டிரம்புடன் பிரச்சினை ஏற்பட்டு கோஹன் பிரிந்த நிலையில், அவர் தற்போது தனது தொழில் பேரங்களுக்காகவும் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை மீறி நிதி முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டிலும் FBI விசாரணையின் கீழ் உள்ளார்.

.