டாஸ்மாக்: ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள்: கமல் காட்டம்
ஹைலைட்ஸ்
- ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள்
- சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன
- வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான்.
ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. தேனி மாவட்டத்தில் 94 மதுக்கடைகள் உள்ளன. அவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு இன்று முதல் மதுக்கடைகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனை மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிசென்றனர். எனினும், மதுக்கடை திறப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான்.
பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் அம்மாவின் அரசா?. தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது. இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்கு போகும், பின் அரசு நடத்தும் சாராய கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும். தமிழ் நாட்டை ஆள்பவர்களுக்கு.
ஓட்டுக்கு இத்தனை ஆயிரம், விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் என 5 வருடத்திற்கு ஏழைத் தமிழர்களை குத்தகைக்கு எடுத்த அரசு, இன்று ஆட்சி கவிழும் தருவாயில் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது. ஆண்டவர்களும், ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.
இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும். அப்படி எதுவும் நடந்தால், தமிழகத்தின் தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது? சிறைக்கு அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம், கொரோனாவை விட அதிக தமிழ் மக்களைக் கொல்லும்.
கிராமங்களெங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக்கூட்டம். கொள்ளை நோய் ஒரு பக்கம், அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம். தாங்குமா தமிழகம் ? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு. வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, இந்த கொள்ளையரையும் வெளியேற்றும் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.