This Article is From May 06, 2020

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறப்பு: வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு: அசத்தும் காவல்துறை!

அதன்படி, 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறப்பு: வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு: அசத்தும் காவல்துறை!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறப்பு: வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு: அசத்தும் காவல்துறை!

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது
  • வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • டாஸ்மாக் கடைகள் முன்பு 2 போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள்

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் அண்டை மாநில மதுக்கடைகளுக்கு செல்வதால், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரமங்கள் உள்ளன. 

இவற்றை கவனத்தில் கொண்டு மே 7 முதல் மதுக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக' அறிவித்து. எனினும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் கூறியது.  

இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், டாஸ்மாக் திறப்பு அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதனிடையே, சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் 07.05.2020 அன்று திறக்கப்படமாட்டாது. இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும், என தமிழக அரசு நேற்றைய தினம் தெரிவித்தது. 

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ளதால், கூட்டத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும், மதுவாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 03.00 மணி முதல் 5 மணி வரை மதுபானங்கள்  வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.