This Article is From May 05, 2020

‘சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது’- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலை ஊரடங்கு அமல் செய்தபோது, டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

‘சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது’- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்: தமிழக அரசு
  • சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது: அரசு
  • தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

மே 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும்  தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்த அறிவிப்பில், “சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் 07.05.2020 அன்று திறக்கப்படமாட்டாது. இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தமிழக அரசு, 'தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் அண்டை மாநில மதுக்கடைகளுக்கு செல்வதால், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரமங்கள் உள்ளன. இவற்றை கவனத்தில் கொண்டு மே 7 முதல் மதுக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக' அறிவித்து. எனினும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் கூறியது. மதுக்கடைகளுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1. மதுபான கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூட அனுமதியில்லை.

4. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.

5. அனைத்து மதுபான கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

6. தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 

என்று விதிமுறைகளைப் பட்டியலிட்டது தமிழக அரசு. 


 

.