This Article is From Jul 23, 2019

வகுப்பறையில் புகுந்து ஆசிரியர் சரமாரியாக குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்!

வாக்குவாதம் முற்றவே, யாரும் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரதிதேவியை சரமாரியாக குத்தியுள்ளார் குருமுனீஸ்வரன். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரதிதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வகுப்பறையில் புகுந்து ஆசிரியர் சரமாரியாக குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்!

மதுரையில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் நுழைந்து ஆசிரியை ஒருவர் அவரது கணவரால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகில் உள்ள சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரதிதேவி. பட்டதாரியான இவர், மதுரை - திருமங்கலத்தில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இதனிடையே, திருமணமாகி இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், கணவர் குரு முனீஸ்வரன் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, ஒரு வருடத்திற்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் ரதிதேவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு ரதிதேவியின் வீட்டிற்கு சென்ற குரு முனீஸ்வரன், சேர்ந்து வாழ வரும்படி அழைத்துள்ளார். ஆனால் ரதிதேவி வர மறுத்துள்ளார்.

இந்நிலையில் ரதிதேவியை பார்ப்பதற்காக அவர் பணிபுரியும் பள்ளிக்கு நேற்று மதியம் அவரது கணவர் குரு முனீஸ்வரன் அங்கு சென்றுள்ளார். வகுப்பறைக்கு வந்த அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த ரதிதேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே, யாரும் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரதிதேவியை சரமாரியாக குத்தியுள்ளார் குருமுனீஸ்வரன். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரதிதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ரதிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்த குருமுனீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ரதிதேவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், முனீஸ்வரன் குடும்பத்தினரின் தூண்டுதல் காரணமாகவே தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது குடும்பத்தையும் கைது செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.