பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக பள்ளிக்குத் திரும்ப வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது அரசு தரப்பு. அதைப் பொறுட்படுத்தாமல் தொடர்ந்து ஸ்ட்ரைக் நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல வேண்டும். 2013 முதல் கடந்த ஆண்டு வரை ஆசிரியர் தேர்வுகளை வெற்றிகரமாக எழுதி முடித்து வேலை இல்லாமல் 1 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள், உங்கள் பணியிடத்தை நிரப்பி விடுவார்கள். எனவே அதை ஆசிரியர்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.
தமிழக அளவில் சுமார் 13 லட்சம் அரசு பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 8 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று கல்வித்துறை முதன்மை செயலாளர், ‘இன்று நடக்கும் குடியரசு தின விழாவிற்கு அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு வராத நாட்களில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அரசு தரப்பில் எப்படிப்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், ஊழியர்கள் சங்கம், ‘கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று உறுதியாக கூறியுள்ளது.