ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்க தடை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்றனர். ஏற்கனவே தேர்வு எழுதாத சுமார் 1500 பேருக்கு ஊதியம் கொடுக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தகுதி தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில், தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை. 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் தகுதி தேர்வு முடிக்காதவர்களுக்கு கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை பணிநீக்கம் செய்ய தடைகோரி 4 ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)