பாஜக அலுவலகத்தில் சேர்கள் உடைக்கப்படும் காட்சி
Nizamabad (Telangana): தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்படுகின்றன.
தேர்தலையொட்டி, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கடந்த மாதம் 20-ம்தேதி 38 வேட்பாளர்களைக் கொண்ட முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட 2-வது கட்ட பட்டியலில் மொத்தம் 28 பேர் இடம்பெற்றிருந்தனர். மொத்தம் உள்ள 119 வேட்பாளர்களில் 66 பேர் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பாஜகாவின் மாநில நிர்வாகி தனபால் சூர்யநாராயண குப்தாவின் பெயர் இடம்பெறவில்லை. நிஜாமாபாத்தில் அவர் போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த குப்தாவின் ஆதரவாளர்கள் நிஜாமாபாத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதன் தொடர்ச்சியாக நிஜாமாபாத் மற்றும் சேரிலிங்ம்பள்ளி ஆகிய இடங்களில் குப்தாவின் ஆதரவாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.