This Article is From Dec 06, 2019

Telengana என்கவுன்ட்டர்: BJP எழுப்பும் முக்கிய கேள்வி; பதில் சொல்லுமா அரசு..?

Telangana encounter: இது குறித்து தெலங்கானா பாஜக, நடுநிலையாக கருத்து கூறியிருந்தாலும், பாஜகவின் சில தலைவர்கள் அதை வரவேற்று கருத்து கூறியுள்ளனர்

Telengana என்கவுன்ட்டர்: BJP எழுப்பும் முக்கிய கேள்வி; பதில் சொல்லுமா அரசு..?

Telangana encounter: முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிலரும் ஐதராபாத் போலீஸின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளனர்

New Delhi:

Telangana encounter: தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தியாவையே கலங்கடித்த இச்சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ். இன்று அந்த 4 பேரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்ய போலீஸ் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது 4 பேரும் தப்பித்துச் செல்ல முற்பட்டதாகவும், அதனால் என்கவுன்ட்டரில் அனைவரையும் கொன்றதாகவும் போலீஸ் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. 

காவல் துறையின் இந்த நடவடிக்கை சரியா தவறா என்கின்ற கேள்வி விவாதங்களைக் கிளப்பியிருக்கின்றன. இந்நிலையில் தெலங்கானா பாஜக, என்கவுன்ட்டர் குறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. 

“கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்வது என்பது மிகக் கொடூரமான செயலாகும். பாஜக அதை வன்மையாகக் கண்டித்திருந்தது. அதேபோல, இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் தெலங்கானா அரசை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் வலியுறுத்தினோம்.

அதே நேரத்தில் இந்தியா ‘ஒப்புக்கான குடியரசு நாடு' அல்ல. அரசியல் சட்ட சாசனத்தின்படிதான் இங்கு அனைத்தும் நடக்க வேண்டும். குற்ற சம்பவத்தை முன்வைத்து அரசியல் செய்வது சரியாக இருக்காது. தெலங்கானா மாநில அரசு மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோர் உடனடியாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும். நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். ஒரு பொருப்புள்ள எதிர்க்கட்சியாக பாஜக, அதிகாரபூர்வ விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னர்தான் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும்,” என்று தெலங்கானா மாநில பாஜகவின், செய்தித் தொடர்பாளர் கே.கிருஷ்ண சாகர் ராவ் விளக்கமாக பேசியுள்ளார். 

முன்னதாக, கடந்த நவம்பர் 28 ஆம் தேதியன்று ஐதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர், தனது பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.  

இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. இதனிடையே, அந்த பெண்ணிடம் உதவி செய்வது போல் நடித்து அவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண்ணை எரித்துக்கொலையும் செய்துள்ளனர். 

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் 4 பேரும் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, தெலுங்கானா அரசு இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வலியுறுத்தியது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் இன்று அதிகாலை என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது. 
 

இது குறித்து தெலங்கானா பாஜக, நடுநிலையாக கருத்து கூறியிருந்தாலும், பாஜகவின் சில தலைவர்கள் அதை வரவேற்று கருத்து கூறியுள்ளனர். முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சிலரும் ஐதராபாத் போலீஸின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளனர். 

அதே நேரத்தில் வழக்கறிஞரான விரிந்தா குரோவர், “இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தை ஏற்கவே முடியாது. தீடிர் மகிழ்ச்சி கொடுக்கும் வகையிலான இது போன்ற நீதி கிடைக்கப் பெறக் கூடாது. என்கவுன்ட்டர் குறித்து சுதந்திரமான விசாரணை செய்ய வேண்டியது அவசியம். காவல் துறை இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.


 

.