This Article is From Oct 30, 2019

புற்றுநோயால் போராடும் 17 வயது சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய ஆணையர்!!

செவ்வாய்கிழமையன்று ரச்சகொண்டா நகரத்தின் ஒருநாள் காவல் ஆணையராக ரம்யா பதவியேற்றார்.

புற்றுநோயால் போராடும் 17 வயது சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய ஆணையர்!!

சிறுமி ரம்யா (17) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

Hyderabad:

ரத்த புற்றுநோயால் போராடி வரும் 17 வயது சிறுமியின் விருப்பத்தை ரச்சகோண்டா நகரத்தின் காவல் ஆணையர் நிறைவேற்றி வைத்துள்ளார். 

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ரம்யா (17) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் ரம்யா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு ஒருநாள் ரச்சகொண்டா நகர காவல் ஆணையராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இந்நிலையில், காவல் அதிகாரி ஆக வேண்டும் என்ற ரம்யாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக 'மேக் எ விஷ்' அமைப்பு, ரச்சகொண்டா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் பகவத்திடம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து ரம்யாவை ரச்சகொண்டா காவல் ஆணையராக நியமித்து போலீஸ் அதிகாரி மகேஷ் கௌரவித்தார்.

இதன்மூலம் அச்சிறுமியின் ஆசையை நிறைவேற்றியும் வைத்தார். ரச்சகொண்டா நகரத்தின் ஒருநாள் காவல் ஆணையராக பதவியேற்ற ரம்யா நகரத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவதாகவும், காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரம்யா கூறும்போது, ரச்சகொண்டா மாநில காவல் ஆணையராக நான் பதவியேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள் காவல் ஆணையரான நான் ரச்சகொண்டா பகுதியில் நடைபெறும் குற்றங்களை தடுப்பேன். அத்துடன் சட்ட ஒழுங்கு தொடர்பான குற்றங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான குற்றங்களை நான் தடுப்பேன் என்றார்.

ரம்யா ஆணையராக பதவியேற்ற போது, அவரது தாயாருக்கும் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ரம்யாவுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பேசிய போலீஸ் அதிகாரி மகேஷ், அவரது குடும்பத்துக்கு தன்னால் இயன்ற நிதியுதவியையும் அளித்தார்.

ரச்சகொண்டா நகர காவல்துறை ஒருநாள் காவல் ஆணையர் என்ற ஆசையை நிறைவேற்றுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு எசான் என்ற சிறுவனின் ஒருநாள் காவல் ஆணையர் ஆசையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

.