Telangana Encounter: 'இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 4 பேரும் குற்றவாளிகள் என்று கருதுகிறோம். அவர்கள் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக எண்ணுகிறோம்'
Cyberabad: Telangana Encounter: தெலங்கானாவில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டர் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள சைராபாத் காவல் துறை ஆணையர் வி.சி.சஜ்ஜனார், “சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது,” எனக் கூறியுள்ளார். போலீஸாரின் ஆயுதங்களைப் பறிக்க முயன்றபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரும் கொல்லப்பட்டதாக சஜ்ஜனார் கூறியுள்ளார்.
தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தியாவையே கலங்கடித்த இச்சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ். இன்று அந்த 4 பேரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்ய போலீஸ் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது 4 பேரும் தப்பித்துச் செல்ல முற்பட்டதாகவும், அதனால் என்கவுன்ட்டரில் அனைவரையும் கொன்றதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் என்கவுன்ட்டர் குறித்து விளக்கம் அளித்த ஆணையர் சஜ்ஜனார், “எங்கள் ஆயுதங்களைப் பறித்த பின்னர், குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரும் எங்களை கற்களைக் கொண்டும் கூர்மையான பொருட்கள் கொண்டும் தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் போலீஸ் தரப்பைச் சேர்ந்த 2 பேருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.
“என்கவுன்ட்டர் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளனவே,” என்று கேட்டதற்கு, ஆணைய சஜ்ஜனார், “சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்,” என்றவர்,
மேலும், “கடந்த 4 நாட்களில் மரபணுக் கூறு ஆய்வைச் செய்தோம். அதை வைத்து, கைது செய்யப்பட்ட 4 பேர்தான் குற்றத்தைப் புரிந்தார்கள் என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவ முற்பட்டோம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 4 பேரும் குற்றவாளிகள் என்று கருதுகிறோம். அவர்கள் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக எண்ணுகிறோம்,” என்று விளக்கினார்.
முன்னதாக, கடந்த நவம்பர் 28 ஆம் தேதியன்று ஐதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர், தனது பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.
இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. இதனிடையே, அந்த பெண்ணிடம் உதவி செய்வது போல் நடித்து அவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண்ணை எரித்துக்கொலையும் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் 4 பேரும் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, தெலுங்கானா அரசு இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வலியுறுத்தியது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் இன்று அதிகாலை என்கவுன்ட்டர் சம்பவம் நடந்துள்ளது. முகமது (26), ஜோலு சிவா (20), ஜோலு நவீன் (20) மற்றும் சிந்தகுன்டா சேனகேவலு (20) ஆகிய 4 பேரும் இன்று காலை என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.