தெலங்கானா மாநில தேர்தலில் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தான் வந்தேரு பிரதாப் ரெட்டி
Hyderabad (Telangana): தெலங்கானாவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான வந்தேரு பிரதாப் ரெட்டியின் ஐதராபாத் வீட்டில் நேற்று இரவு நடந்த போலீஸ் ரெய்டைத் தொடர்ந்து அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
தெலங்கானா மாநில தேர்தலில் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தான் வந்தேரு பிரதாப் ரெட்டி. தெலங்கானா ராஸ்டிர சமிதி தலைவரான கே.சந்திரசேகர் ராவ் இத்தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுகிறார்.
நேற்று இரவு வந்தேரு பிரதாப் ரெட்டி வீட்டில் போலீஸ் சோதனை நடத்த வந்தபோது ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சோதனையைத் தடுத்துள்ளனர். பின்னர், போலீஸார் தன்னைக் கொலை செய்ய வந்துள்ளதாகக் கூறி ரெட்டி தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டார் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
மூத்த போலீஸ் அதிகாரி பிவி பத்மஜா கூறுகையில், ‘சட்டவிரோதமான முறையில் வந்தேரு பிரதாப் ரெட்டியின் வீட்டில் மது மற்றும் பணம் விநியோகம் நடப்பதாக எங்களுக்குப் புகார் வந்ததன் காரணத்தினாலே சோதனை நடத்தப்பட்டது.
பிரதாப் ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் போலீஸ் அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொண்டனர். கூடுதலாக தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டார். ஆனால், அவரது வீட்டில் நாங்கள் எதையும் எடுக்கவில்லை' என்றார்.
பிரதாப் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சோதனைப் படையினர் புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் அதிகாரியிடம் சட்டவிரோதமான கண்கானிப்பு மற்றும் துன்புறுத்தல் இருப்பதாக தேர்தல் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அதன் பின்னர் போலீஸார் வந்து, பிரதாப் ரெட்டியை அப்புறப்படுத்தவே ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் பிரதாப் ரெட்டி அனுமதிக்கப்பட்டார்.
தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் சமயத்தில் மாநிலத்தில் சட்டவிரோதமான நடவடிக்கைகளை போலீஸார் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருகிற டிசம்பர் 7-ம் தேதி தெலங்கானாவின் 119 தொகுதிகளுக்கான மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதன் பின்னர் டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.