This Article is From Nov 14, 2018

‘தெலங்கானாவில் பாஜக ஆட்டத்திலேயே இல்லை, காங்கிரஸுடன் தான் நேரடி போட்டி!’- டி.ஆர்.எஸ் ‘நறுக்’

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்கியது.

‘தெலங்கானாவில் பாஜக ஆட்டத்திலேயே இல்லை, காங்கிரஸுடன் தான் நேரடி போட்டி!’- டி.ஆர்.எஸ் ‘நறுக்’

இந்த முறை எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டணி சேரவில்லை.

Hyderabad:

தெலங்கானாவில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், காங்கிரஸ் மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகள், தங்களுக்குள் தான் நேரடி போட்டி நிலவுகிறது என்றும், பாஜக-வுக்கு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்து வருகின்றன.

ஆனால் பாஜக-வோ, ‘தெலங்கானாவில் இந்த முறை தொங்கு சட்டமன்றம் அமையும். எங்கள் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமை வரும்' என்று ஆருடம் தெரிவிக்கிறது. 

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஆர்.சி.குன்டியா, ‘தற்போது கலைக்கப்பட்ட சட்டப்பேரவையில் பாஜக-வுக்கு 5 இடங்கள் இருந்தன. இந்த முறை அந்தக் கட்சியால் 1 அல்லது 2 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

அதேபோல தெலங்கானா காபந்து முதல்வராக இருப்பவரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ், ‘எங்களின் நேரடி எதிரி காங்கிரஸ் தான். தெலங்கானாவில் பாஜக-வுக்கு இடமே இல்லை. தெலங்கானாவில் இருக்கும் 119 தொகுதிகளில் 100-லாவது பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். அந்தக் கட்சியிலிருந்து ஒரேயொருவர் கூட எம்.எல்.ஏ-வாக தேர்வாக மாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் பாஜக தரப்போ, ‘எங்களுக்கு வெற்றி வாய்ப்பே இல்லையென்று மற்ற கட்சிகள் கருதுகின்றனர். எங்கள் திறனை மிகவும் குறைத்து மதிப்பிட்டு வைத்துள்ளார்கள். ஆனால், நாங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுப்போம். 

எங்கள் கணிப்புப்படி, தெலங்கானாவில் தொங்கு சட்டமன்றம் அமையும். அப்போது எங்கள் தயவில்லாமல் ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்கியது. இந்த முறை எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டணி சேரவில்லை. அடுத்த மாதம் 7 ஆம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

.