அவர்கள் நான்கு பேரின் பெற்றோர் அனுபவித்த வேதனையை நினைத்து பாருங்கள்
Hyderabad: தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி எரித்துக்கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அவர்களது பெற்றோர் மிகுந்த வேதனையை அனுபவித்திருக்க வேண்டும் என தெலுங்கானா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர் சுனிதா பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ஆபத்து நேரங்களில் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவத்தாலும், அவர்களால் உடனடியாக வர முடியாது. அவர்கள் வருவதற்கு 3 அல்லது 5 நிமிடங்கள் ஆகும். அந்த இடைப்பட்ட காலத்திற்கும் எந்த இழப்புகள் வேண்டுமானாலும் நேரலாம். இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மேலும், வேதைனைய அளித்துள்ளது. அவர்கள் நான்கு பேரின் பெற்றோர் அனுபவித்த வேதனையை நினைத்து பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த நவ.28ஆம் தேதியன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.
இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. இதனிடையே, அந்த பெண்ணிடம் உதவி செய்வது போல் நடித்து அவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண்ணை எரித்துக்கொலையும் செய்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு காரணமான முகமது ஆரிப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன், சின்னகுண்ட்டா சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் கடந்த வாரத்தில் அதிகாலை 3 மணி அளவில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.
அப்போது, அவர்கள் 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு அவர்களின் ஆயுதங்களை எடுத்து தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதனால், அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.