பொருளாதார பாதிப்பை பின்னாளில் சரி செய்துகொள்ளலாம் என்கிறார் தெலங்கானா முதல்வர்.
ஹைலைட்ஸ்
- ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் வலியுறுத்தல்
- ''பொருளாதார இழப்பை சரி செய்து கொள்ளலாம். உயிர்களை காப்பதுதான் முக்கியம்''
- இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,500-யை கடந்துள்ளது
Hyderabad: இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் உயிர்களைக் காக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காகக் கடந்த மாதம் 25-ம்தேதி முதல், 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
இதற்கிடையே, நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று, தெலங்கானாவில் ஜூன் 3-ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது வதந்தி என தெலங்கானா அரசு விளக்கம் அளித்தது.
ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமர் மோடி முதல்வர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அவரிடம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
ஒவ்வொரு நாளும் நமக்கு ரூ. 400 முதல் ரூ. 450 கோடி வரையில் இழப்பு ஏற்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் 4 நாட்களில் மட்டும் ரூ. 2,400 கோடியளவுக்கு செலவாகியுள்ளது. உயிர்களைக் காக்க நாம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். அதனை பின்னாளில் சரி செய்து கொள்ளலாம். இதுதொடர்பாக பிரதமரிடம் பேசியுள்ளேன்.
ஊரடங்கை தவிர்த்து கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியில்லை. போஸ்டன் கன்சல்டிங் குழுமம் ஜூன் 3-ம்தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.