தனது தந்தையும், அரசியல்வாதிகளும் தன்னையும் தனது கணவரையும் மிரட்டியதாக அம்ருதா கூறியுள்ளார்
Nalgonda, Telangana: Telangana: தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இளைஞரை கொன்றவர்களில் ஒருவரை பீகாரில் கைது செய்துள்ளதாக என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில் போலீசார் கூறினர். அவர்கள் அளித்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட இளைஞர் பிரனாயை கொல்வதற்கு பீகாரில் இருந்து கூலிப்படை நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.- அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரனாயை கொன்றால் ரூ. 1 கோடி அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு அட்வான்ஸாக ரூ. 18 லட்சம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2003-ல் முன்னாள் குஜராத் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட ஒருவரும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார். மேலும், நல்கொண்டாவை சேர்ந்த சில அரசியல்வாதிகளுக்கும் பிரனாயின் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
நல்கொண்டா மருத்துவமனை சிசிடிவியில் பதிவான கொலை சம்பவம்
நல்கொண்டாவில் 23 வயது பொறியாளரான பிரனாயை அவரது கர்ப்பிணி மனைவி முன்பாக கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இந்த காட்சிகள் மருத்துவமனையின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் வெளியான இந்த காட்சிகள் வைரலாக பரவி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ரியல் எஸ்டேட் அதிபரின் மகளான அம்ருதா, பிரனாயை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இதற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் மற்றும் மாமா சரவண் ராவ் ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இந்த படுகொலையில் அவர்கள் இருவரும்தான் முக்கிய குற்றவாளிகள் என்று அம்ருதா புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அம்ருதா கூறுகையில், என்னையும் எனது கணவரையும் அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்தனர். இதனால் நாங்கள் தலைமறைவாகி விடலாம் என்ற முடிவில் இருந்தோம். ஆனால் இப்படியொரு சம்பவம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனது அப்பாவுக்கு அரசியல்வாதிகள் தொடர்பு உண்டு. அதன் மூலம் பிரனாய் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டினார். எனது கருவை கலைக்க மாட்டேன். பிரனாயின் குழந்தைதான் எனது எதிர்காலம் என்றார்.
பள்ளிப் பருவத்தில் அம்ருதாவும் பிரனாயும் சந்தித்துக் கொண்டனர். ஐதராபாத் கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. வெவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும் கடும் எதிர்ப்புக்கிடையே கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பிரனாயின் குடும்பம் அம்ருதாவை ஏற்றுக் கொண்டது.