This Article is From Jan 09, 2019

‘சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் சென்றது கோழைத்தனம்!’- முன்னாள் இஸ்ரோ தலைவர்

கடந்த புதன் கிழமை அதிகாலை, இரண்டு இளவயதுப் பெண்கள் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று, வரலாறு படைத்தனர்

‘சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் சென்றது கோழைத்தனம்!’- முன்னாள் இஸ்ரோ தலைவர்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் பல பெண்கள் தனியாகவும் குழுக்களாகவும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.

Hyderabad:

கடந்த புதன் கிழமை அதிகாலை, இரண்டு இளவயதுப் பெண்கள் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று, வரலாறு படைத்தனர். ‘ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல வயதோ பாலின பேதமோ இருக்கக் கூடாது. எந்த வயதுப் பெண்களும் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்' என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் பல பெண்கள் தனியாகவும் குழுக்களாகவும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அவர்கள் அனைவரும் மலையை சூழ்ந்திருக்கும் வலதுசாரி போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இப்படிப்பட்ட சூழலில்தான் கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகா புதன் கிழமை அதிகாலை 3:45 மணிக்கு எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தனர். இதற்கு வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் இஸ்ரோ அமைப்பின் தலைவரும் இந்நாள் பாஜக உறுப்பினருமான கே.மாதவன் நாயர் சபரிமலையில் பெண்கள் நுழைவு குறித்து கூறுகையில், ‘நட்ட நடு ராத்திரியில் இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்திருப்பது கோழைத்தனம். கேரளாவில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரி அரசாங்கம், கடும் மழையால் பாதிப்படைந்துள்ள மாநிலத்தை மீட்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், சபரிமலை விவகாரத்தில் நேர விரயம் செய்து வருகிறது அரசு.

மழைக்குப் பிறகான மீட்டுருவாக்கும் பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. அதில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும். இரண்டு பெண்களும் அரசின் உதவியுடன்தான் சாமி தரிசனம் செய்துள்ளனர்' என்று குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பேசும்போது, ‘சபரிமலைக்குப் பெண்கள் வரக் கூடாது என்று சொல்வது ஒரு மத நம்பிக்கை. அதில் சட்டத்துக்கு இடமில்லை. கிறித்துவத்திலும், சீக்கியத்திலும், இஸ்லாத்திலும் பல்வேறு மத நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பின்பற்றப்படுகின்றன. அதையெல்லாம் ஏன் யாரும் கேள்விக்கு உட்படுத்த மறுக்கிறார்கள். இந்த மொத்த விவகாரமே, அரசியல் நோக்குடன் அணுகப்பட்டு வருகிறது' என்று கருத்து தெரிவித்தார். 
 

.