This Article is From Apr 25, 2020

இம்மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர்களுக்கு தற்காலிக பணி நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

30-04-2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

இம்மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர்களுக்கு தற்காலிக பணி நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.755 ஆக அதிகரித்துள்ள நிலையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முழு ஊரடங்கினை நாளை முதல் நான்கு நாட்களுக்கு மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களில் அமல் படுத்தப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஏப்ரல் 30 அன்றுடன் பணி ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்குத் தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஏற்கெனவே 1,058 ஆய்வக நுட்புனர்கள் (LAB TECHICIAN), 530 மருத்துவர்கள் மற்றும் ,1,000 செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும், 31-03-2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர்  மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள்.

அதே போன்று, 30-04-2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.