தீவிரவாதிகள் தாக்குதல்: மறைந்த தென்காசி காவலர் குடும்பத்துக்கு நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
ஹைலைட்ஸ்
- இறந்த தென்காசி காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவு
- அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், அமைச்சருக்கு உத்தரவு
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த தென்காசியைச் சேர்ந்த சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்ட்டரின்போது துணை ராணுவ வீரரான தமிழகத்தை சந்திரசேகர் உயிரிழந்தார். சந்திரசேகர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் என்ற பகுதியை சேர்ந்தவர். அவரது மறைவால் மூன்று வாய்க்கால் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, அவர்களைக் கண்ட தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 3 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வீர மரணம் அடைந்த ரிசர்வ் போலீஸ் வீரர்களில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்த சந்திர சேகரும் ஒருவர். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டம் மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செ.சந்திரசேகர். இவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் 92-வது படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மே 4ம் தேதி ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்தை உடனடியாக வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், அமைச்சர் ராஜலட்சுமிக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.