தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Srinagar: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படை நடத்திய பதிலடியில் தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் ஆகியோர் காயம் அடைந்திருக்கின்றனர்.
அனந்த்நாக் மாவட்டத்தின் கே.பி. சாலையில், தீவிரவாதிகள் 2 பேர் துணை ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆட்டோமேட்டிக் மெஷின் துப்பாக்கிகள் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டன. மேலும் அவர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் துணை ராணுவத்தினர் 5 பேர் உயிரிழந்தனர். அனந்த்நாக் காவல் நிலைய அதிகாரி அர்ஷத் அகமது தீவிரவாதிகளின் தாக்குதலில் காயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தின்போது துணை ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இதன்பின்னர் இந்தியா பாலகோட்டில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது குறிப்பிடத்தக்கது.