தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ தரப்பு அவர்கள் மீது பதிலடி தாக்குதலைத் தொடுத்துள்ளது. (Representational)
Pulwama: ஜம்மூ காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலத்தின் புல்வாமா (Pulwama) மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், சிஆர்பிஎப் வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதுவரை இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
டிராப்கம் பகுதியில் இருக்கும் பள்ளியில்தான் இச்சம்பவம் நடந்துள்ளதாம். தேர்வு மையமாக அந்த பள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தை சிஆர்பிஎப் வீரர்களும் உள்ளூர் போலீஸும் பாதுகாத்து வந்தனர்.
தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ராணுவ தரப்பு அவர்கள் மீது பதிலடி தாக்குதலைத் தொடுத்துள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஜம்மூ காஷ்மீருக்கு 23 ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.,கள் இன்று வருகை புரிந்துள்ளனர். அவர்கள் வரும் சமயத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. நேற்று எம்.பி.,கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜம்மூ காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரவான, 370-ஐ, மத்திய அரசு ரத்து செய்தது. அதன் பின்னர் இப்போதுதான் சர்வதேச குழு ஒன்று காஷ்மீருக்கு வருகை தந்துள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் காஷ்மீரில் வன்முறை நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிப்பு மற்றும் தொலைதொடர்பு முடக்க நடவடிக்கை ஆகியவை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.