Madrid, Spain: கடந்த ஆண்டு ஸ்பெயினின் பார்சிலோனாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகினார். தாக்குதல் நடத்துவதற்கு முன், தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரிப்பது போலான படங்களை செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. ஒரு படத்தில் உடலில் குண்டுகளை பொருத்திக் கொண்டு சிரித்தபடி ஒரு தீவிரவாதி நிற்பது போலவும், மற்றொன்றில் குண்டு தயாரிக்கும் போது இரண்டு தீவிரவாதிகள் போஸ் கொடுப்பதாகவும் இருந்தது.
குண்டு தயாரிக்கும் போது எடுக்கப்பட்ட படத்தில் இருக்கும் ஒருவரின் பெயர் யூனெஸ் அபுயூகப்(22). இவர், ஒரு வேனை மக்கள் கூட்டத்துக்குள் ஓட்டிச் சென்று 13 பேரை கொன்று குவித்தவன். பார்சிலோனாவின் மையப்பகுதியான, லாஸ் ரம்பிளாஸ் பொலிவர்டு என்ற பகுதியில் 2017 ஆகஸ்ட் 17 அன்று இத்தாக்குதல் நடந்தது.
மேலும், அங்கிருந்து தப்பித்துச் செல்ல, ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்பெயினின் செய்தித் நிறுவனமான லா ரேசன் இப்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பார்சிலோனாவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அல்கேனார் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இந்த படங்கள் எடுக்கப்படடதாக தெரிவித்துள்ளது லா ரேசன். அந்த வீட்டில் தான் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன் குண்டுகள் தவறாக வெடித்ததில் இரண்டு தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். அதனால் திட்டத்தை மாற்றி வேனைக் கொண்டு மக்கள் கூட்டத்தில் மோதி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.
தாக்குதலை நடத்திய 6 இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் மொராக்கோவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.