ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அந்தவகையில், 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவிருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஏப்ரல் 12ம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் சரிவர வேலை செய்யாததால் கால அவகாசத்துக்குள் விண்ணப்பிக்க முடியவில்லை என தேர்வர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதேபோல், விண்ணப்பித்த பிறகு மின்னஞ்சலும் வருவதற்கு காலதாமதல் ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளது. இதைத்தொடர்ந்தே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.