"என்னை இந்தியில் பேச அனுமதித்ததற்கு ராமோன் மகசேசே விருது அமைப்பாளர்களுக்கு நன்றி"
மிகவும் பிரபலமுடைய ராமோன் மகசேசே விருது 2019-ஐப் பெற்ற பின்னர் NDTV-யின் ரவிஷ் குமார், பிலிப்பைன்ஸில், “ஜனநாயகத்தை உயர்த்தும் சக்திவாய்ந்த குடிமகன் செய்யும் இதழியல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ‘குரலற்றவர்களுக்குக் குரலாக இருக்கும் அவருடைய பணியின் காரணமாகவும், மிகவும் உயர்தர இதழியல் பணிக்காகவும்' ரவிஷ் குமாருக்கு மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.
ரவிஷ் குமாரின் உரை,
நமஸ்கார்,
நிலவைத் தொட்டு ஆதிக்கம் செலுத்துகிறது இந்தியா. இந்தப் பெருமையான கணத்தில் நான் பூமியையும் நிலத்தையும் ஒருசேரப் பார்க்கிறேன். எனது தெருக்களில் இருக்கும் குண்டும் குழிகளும் நிலவில் இருப்பவைகளை விட அதிகமாக இருக்கின்றன. உலகின் பல இடங்களிலும் ஜனநாயகம் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்த அனலை மிகவும் பரிசுத்தமான தகவல்கள் மூலமும் தைரியத்தினாலும் மட்டுமே அணைக்க முடியும். நமது தகவல்கள் எந்தளவுக்குப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நம்பிக்கைப் பிறக்கும்.
தகவல்கள்தான் தேசங்களைக் கட்டியெழுப்ப உதவுகின்றன. அதே நேரத்தில் போலி செய்திகள், பிரசாரம் மற்றும் தவறான வரலாற்றுக் கற்பிதம் ரவுடி கும்பலை உருவாக்குகின்றன. என்னை இந்தியில் பேச அனுமதித்ததற்கு ராமோன் மகசேசே விருது அமைப்பாளர்களுக்கு நன்றி. இல்லையென்றால், வீட்டில் எனது உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் என் தாய்க்கு ஒரு வார்த்தைக் கூட புரிந்திருக்காது.
NDTV-யைப் பார்க்கும் பல லட்ச நேயர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் NDTV-யில் பணியாற்றும் அனைவரையும் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். எனது இதழியல் பணி இந்தியில்தான் நடக்கிறது. ஆனால் இந்தியாவின் பல மூளைகளில் இருந்தும் நான் வாழ்த்துச் செய்திகளைப் பெற்றேன். நான் அனைவருக்கும் ஆனவன்.
இந்தியாதான் என்னை குடிமகனாக மாற்றியது. எனது வரலாற்று ஆசிரியர்களை நான் என்றும் நினைவில் கொள்வேன். எனது ஆதர்சமான அனுபம் மிஷ்ராவையும் நான் நினைவில் கொள்கிறேன். எனது நண்பர் அனுராக் இங்கு இருக்கிறார். எனது மகள்கள் மற்றும் எனது வாழ்க்கைத் துணை நயானாவும் இங்கு இருக்கிறார்கள். நயானா போட்ட பாதையில் நடந்துதான் நான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். நீங்களும் மிகவும் அறிவார்ந்த பெண்ணின் வழித்தடத்தை பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன். நீங்களும் நல்ல குடிமக்களாக மாறுவீர்கள் என நம்புகிறேன்.