This Article is From Feb 08, 2020

தைப்பூசத் திருவிழா! முருகன் கோவில்களில் பக்தர்கள் திரளாக தரிசனம்!

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் தொடங்கி, திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

தைப்பூசத் திருவிழா! முருகன் கோவில்களில் பக்தர்கள் திரளாக தரிசனம்!

மூன்றாம்படை வீடான பழநியில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவும், நாளை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது.

தமிழர்களின் பாரம்பர்யத் திருவிழாவான தைப்பூசத் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத் திருவிழாவையொட்டி முருகன் பெருமானின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட கோவில்களில் லட்சக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கடவுள் முருகப் பெருமான் அவதரித்த நாளாக கருதப்படும் தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரையாகவும், காவடி, அலகு குத்தியும் வருகை தருவது வழக்கம். இதில், அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் தொடங்கி, திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைபூசத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 

தைப்பூசத்தையொட்டி, நெல்லை, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து காவடி எடுத்து, வேல்குத்தி பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், மூன்றாம்படை வீடான பழநியில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவும், நாளை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது. மேலும் வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 

மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர். பினாங்கு, ஈப்போ ஆகிய இடங்களிலும், சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 

.