This Article is From Mar 07, 2019

‘துரைமுருகன் அப்படி பேசியிருக்கக்கூடாது!’-தேமுதிக-வுக்கு முட்டுகொடுக்கும் தம்பிதுரை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ‘தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைவதில் எந்த சுணக்கமும் இருக்காது. இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வரும்’ என்றுள்ளார்.

‘துரைமுருகன் அப்படி பேசியிருக்கக்கூடாது!’-தேமுதிக-வுக்கு முட்டுகொடுக்கும் தம்பிதுரை

தேமுதிக-வுக்கு கூட்டணிக் கதவை அடைத்துள்ளது திமுக

ஹைலைட்ஸ்

  • திமுக கூட்டணியில் காங்கிரஸுக்குத்தான் முதலில் தொகுதி ஒதுக்கப்பட்டது
  • பின்னர் தோழமைக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது திமுக
  • திமுக, தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக நிர்வாகிகள் நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தனர். அதே நேரத்தில் தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை, தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் சந்தித்து, அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரே நேரத்தில் இரு தரப்பிலும் தேமுதிக பேசியுள்ளது பலத்த சலசலப்புக்கு உள்ளானது. இதே காரணத்தைச் சுட்டிக்காட்டி துரைமுருகனும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முடக்குப் போட்டார். 

தேமுதிக நிர்வாகிகளை சந்தித்தது குறித்து பேசிய துரைமுருகன், ‘தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் கூட்டணியில் வருவது குறித்துதான் பேசினர். எங்களுக்கும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. இனி கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டேன். ஒரு வாரத்துக்கு முன்னரே அவர்களிடம் கூட்டணி குறித்து பேசினோம். அப்போதெல்லாம் எதுவும் சொல்லாமல் இப்போது வந்து பேசினால் என்ன பிரயோஜனம் இருக்கும்' என்று வெளிப்படையாக தேமுதிக-வுக்கு நோஸ்-கட் கொடுத்தார். 

துரைமுருகனின் இந்தக் கருத்துக்கு தற்போது அதிமுக எம்.பி-யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து பேசும்போது, ‘தேர்தல் சமயத்தில் கூட்டணி அமைப்பது குறித்து ஒரு கட்சி, பல இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தத்தான் செய்யும். இது மிக சாதரணமான விஷயம். ஒரு அறையில் நடந்தவற்றை, அநாகரீகமாக பொதுத் தளத்தில் துரை முருகன் சொல்லியிருக்கக் கூடாது. இதுதான் திமுக-வின் அணுகுமுறை. இதைப் போல ஒரு கட்சியால் எப்படி நாட்டுக்கு நல்லது செய்ய முடியும்' என்று கொதித்துள்ளார்.

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சேராமல் மதில் மேல் பூனையாக இருந்து வருகிறது. தேமுதிக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கடந்த இரண்டு வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் திமுக, இரு தினங்களுக்கு முன்னர் தொகுதிப் பங்கீட்டை மொத்தமாக முடித்து விட்டது. அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும், ‘கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு முடித்துவிட்டோம். 20 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும். மீதமுள்ள 20 தொகுதிகளில் நாங்கள் களமிறங்குவோம்' என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் தேமுதிக-வுக்கு கூட்டணிக் கதவை அடைத்தது திமுக.

அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைவதில் எந்த சுணக்கமும் இருக்காது. இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வரும்' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


 

.