அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதைத்தொடர்ந்து, வரும் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதற்கு அதிமுகவின் தோழமை கட்சிகளான முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயகக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. எனினும், இதை பொருட்படுத்தாத அதிமுக இன்று பாஜகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இருந்த மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலளார் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில், தமிமுன் அன்சாரி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அதிமுகவின் தோழமை கட்சியாக செயல்பட்டு வந்த, எம்.எல்.ஏ., கருணாஸ், எம்.எல்.ஏ., தனியரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கடந்த சட்டன்மன்றத் தேர்தலில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் அதிமுக சின்னத்தில் நின்று வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.