சில நாட்களுக்கு முன்னர் தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் உதவியாளரை அழைத்து, அவரைப் பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய தினகரன், “தங்கதமிழ்ச்செல்வனின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி விரைவில் பறிக்கப்படும். அவரால் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது. அவர் ஒரு பெட்டிப் பாம்பு” என்று பரபரப்பாக பேட்டி கொடுத்தார்.
சில நாட்களுக்கு முன்னர் தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் உதவியாளரை அழைத்து, அவரைப் பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். இது குறித்த ஆடியோ ஓரிரு நாட்களுக்கு முன்னர் வெளியாகி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய தினகரன், “தங்க தமிழ்ச்செல்வன் போன் மூலம் பேசியது குறித்து எனக்கு பல நிர்வாகிகளிடம் இருந்து புகார் வந்தது. அதைத் தொடர்ந்து கட்சியில் நாங்கள் ஆலோசித்தோம். ஆலோசனை முடிவில், அவரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.
உடனே ஒரு பத்திரிகையாளர், “பொறுப்பில் இருந்து மட்டும்தான் தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்படுகிறாரா. கட்சியில் அடிப்படை உறுப்பினராக நீடிப்பாரா” என்று கேள்வி கேட்டார்.
அதற்கு தினகரன், “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக என்னுடன் நட்பாக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். தற்போது கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கினால் அவரே புரிந்து கொள்வார்” என்று சூசகமாக பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர், “தான் தோன்றித்தனமாக ஊடகங்களில் பேசுபவர்கள். தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் விரைவில் மாற்றப்படுவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் அமமுக தோல்வியைத் தழுவியது. இதனால் அமமுக-விலிருந்து பலர் அதிமுக-வுக்குத் தாவி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தங்க தமிழ்ச்செல்வன் குறித்த சர்ச்சை அமமுக முகாமில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.