This Article is From Mar 14, 2019

''ராகுல் பேசியதை தங்கபாலு மொழிபெயர்த்தது உணர்ச்சிகரமாக இருந்தது'' : கே.எஸ். அழகிரி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பொதுக்கூட்டத்தில் பேசியதை தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் தங்கபாலு மொழிபெயர்ப்பு செய்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

''ராகுல் பேசியதை தங்கபாலு மொழிபெயர்த்தது உணர்ச்சிகரமாக இருந்தது'' : கே.எஸ். அழகிரி

தங்கபாலுவை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்துள்ளன.

ஹைலைட்ஸ்

  • கன்னியா குமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசினார்
  • ராகுல் ஆங்கிலத்தில் பேசியதை தங்கபாலு தமிழில் மொழிபெயர்த்தார்
  • தங்கபாலுவை விமர்சித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வந்துள்ளன

கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதை தங்கபாலு உணர்ச்சிகரமாக மொழி பெயர்த்தார் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேற்று காலை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்ற ராகுல் அங்கு மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பாராட்டைப் பெற்றார்.

பின்னர் மாலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது ராகுல் பேசியதை, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தமிழில் மொழி பெயர்ப்பு செய்தார். 

ராகுல் பேசியபோது, காஷ்மீர் மக்களுக்கான காப்பீட்டு திட்டம் முழுவதும் அனில் அம்பானியிடம் மோடி ஒப்படைத்து விட்டதாக ஆங்கிலத்தில் கூறினார். இதனை தமிழில் மொழிபெயர்த்த தங்கபாலு, நம்முடைய இந்திய நாட்டுடைய முக்கியமான பகுதியாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் அனில் அம்பானி கையிலே ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று பேசினார். 

அனில் அம்பானி விமானத்தை வாழ்நாளில் ஒருபோதும் தயாரித்தது இல்லை என்று ராகுல் பேசியதை, அனில் அம்பானி எப்போது உண்மையை பேசுபவர் அல்ல என்று தங்கபாலு மொழிபெயர்த்தார். 

இதுபோன்று சில சறுக்கல்களை தங்கபாலு செய்ததால், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சரியான கன்டெண்டாக அவர் மாறியிருக்கிறார். அவரை கலாய்த்து சமூக வலை தளங்களில் மீம்ஸ்களும், வீடியோக்களும் வரத் தொடங்கியுள்ளன.

இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்-

மொழிபெயர்ப்பு என்பது வரிக்கு வரி அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒருவர் மற்ற மொழியில் சொல்கிற கருத்தை மக்களுக்கு புரியும்படி கூறினால் போதுமானது. அந்த வகையில் தங்கபாலு செய்தது வெற்றிகரமாக இருந்தது. 

தங்கபாலுவின் மொழிபெயர்ப்பு மிகவும் உணர்ச்சிகராக இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கருத்து இருந்தால் போதுமானது. இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.