This Article is From Jun 28, 2019

திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்!

அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் அனைவரும் காலை முதலே அறிவாலயத்தில் குழுமினர்.

Advertisement
தமிழ்நாடு Written by

அமமுகவில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன். 

முன்னதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியானது. 

அதிமுகவில் இருந்து தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு, அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்கதமிழ்ச்செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியின் முக்கிய முடிவுகளில் தங்க தமிழ்ச்செல்வனின் ஈடுபாடு அதிகமாகவே இருந்தது.

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனை எதிர்த்து, அமமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை அடைந்தார். இதையடுத்து, தங்கதமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவுக்கே செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது.

Advertisement

இந்நிலையில், அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், தன்னைப் பார்த்தால் தங்க தமிழ்ச்செல்வன் பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவார். தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார். அவருக்கு பதிலாக வேறு ஒரு கொள்கை பரப்புச்செயலாளரை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார். தமிழக அரசியலில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  

Advertisement

இந்நிலையில், தற்போது அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் அனைவரும் காலை முதலே அறிவாலயத்தில் குழுமினர். 

தொடர்ந்து, பிற்பகல் 12.00 மணி அளவில் அறிவாலயம் வந்த தங்க தமிழ்செல்வன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். தங்க தமிழ்செல்வனுடன் தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்து கொண்டனர்.

Advertisement